அரசியலுக்கு "குட்பை" சொல்லும் கவுதம் கம்பீர்! காரணம் என்ன?
கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யாக உள்ளவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இவர், மார்ச் 2019-ல் பாஜகவில் இணைந்தார். அதன்பின் டெல்லியில் பாஜகவின் முக்கிய முகமாக மாறினார். தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யானார்.