தொடர் தோல்வியில் இந்திய அணி | சமூக ஊடகங்களில் பரவும் விமர்சனங்களுக்குக் கவுதம் கம்பீர் பதிலடி!
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் என் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்கள் : தங்கம் விலை மீண்டும் குறைவு…இன்றைய விலை நிலவரம்!
அப்போது அவர் பேசியதாவது :
" முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால் அணியை பும்ரா வழிநடத்துவார். ரோகித் சர்மாவுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் விளையாடுவார்.
மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் என் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? மிகவும் கடினமான, மதிப்புமிக்க வேலை என்று தெரிந்துதான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். முன்னோக்கி நகர்ந்து, ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.