கௌரி கிஷன் விவகாரம் : எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் - நடிகர் சங்கம்..!
அபின் ஹரிஹரன் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதர்ஸ்’. இப்படத்தில் ’96’ பட நடிகை கௌரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வாரம் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், “படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன?” என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மற்றொரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன், “இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல” என பேசியிருந்தார்.
இதையடுத்து நடைபெற்ற ‘அதர்ஸ்’ பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் விதமாக யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. நடிகை கௌரி கிஷனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகை கௌரி கிஷன் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். பின்னர், நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகை கௌரி கிஷனுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய சம்பவத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ”திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள்.
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது.
இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.