ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட நபரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, பெட்ரோல்குண்டுவீச்சு தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வெடிபொருள் பொருள்கள் சட்டம் 1908 இன் பிரிவுகள் 3,4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புகள் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநரை தாக்க முயற்சித்தல் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது.
இதற்கு முன்னரே, கருக்கா வினோத், தியாகராய நகரில் உள்ள டாஸ்மாக், தேனாம்பேட்டை காவல் நிலையம் மற்றும் சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் போன்றவற்றின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்" என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.