கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளேயிருந்து எரிவாயு கசிந்து வருகிறது. அதிகாலையில் விபத்து நடந்ததால் பல மணி நேரமாக வாயு கசிவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எரிவாயு எந்த அளவுக்கு வெளியாகியிருக்கிறது என்பது தொடர்பாக பொறியாளர்களும், தீயணைப்புத் துறையினரு தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.
எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மேலே, கரண்ட் கம்பிகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. எனினும். லாரியிலிருந்து கசிந்து வரும் எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிறிது அச்சத்தில் உறைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக டேக்கரிலிருந்து கசியும் இடம் அடைக்கப்பட்டு எரிவாயு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் ஒரு கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.