திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு... 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் சுமார் 35- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும், மேற்பட்ட மாணவர்கள் மயங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவசர கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஒரு சில மாணவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 மாணவிகளை, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் முதலே வாயுக்கசிவு குறித்து மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எதுவும் இல்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இன்று காலை முதலும் மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வாயு கசிவிற்கு காரணம் அருகாமையில் உள்ள தொழிற்சாலையா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.