#Tirupati ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு - ஏராளமானோர் பங்கேற்பு!
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
இங்குவரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று திருப்பதி ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.
பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு செய்தனர்.