சுருளி அருவியில் குவிந்த குப்பைகள் - பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி!
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. இங்குள்ள தென் கைலாயக் குகையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் திரளான பக்தர்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்து இறை வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடி அமாவாசை தினம் என்பதால்
பல்லாயிரக்கணக்கான மக்கள் சுருளி அருவியின் ஆற்றங்கரைக்கு வந்து
முன்னோர்களையும் வழிபட்டு அவர்களுக்கு படையல் வைத்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இந்த நிலையில், அமாவாசை தினத்தில் ஒன்று கூடிய மக்கள் படையல் இட்டு விட்டுச் சென்ற உணவுகள் மற்றும் பூஜை பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில்
அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்துள்ளது. மேலும் மழைப்பொழிவின் காரணமாக கழிவுகள் மூலம் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடுகளும் ஏற்பட்டு வருகின்றது. மேலும் ஆற்றில் வந்து குளித்துவிட்டு செல்லும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது
வனத்துறையின் கட்டுப்பாடு மற்றும் ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த
ஆற்றுப்பகுதியில் சுகாதாரப் பணிகளை யார் மேற்கொள்வது என்று வனத்துறையினரும் ஊராட்சி நிர்வாகத்தினரும் மோதலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுருளி அருவிக்கு வந்த பொதுமக்கள் புண்ணிய தலமான சுருளி ஆறு சுகாதார சீர்கேடுகளோடு காணப்படுவதாகவும், கட்டணங்கள் பெற்றுக்கொள்ளும் ஊராட்சி மற்றும் வனத்துறை நிர்வாகங்கள் எந்தவித அடிப்படை பராமரிப்பு பணிகளும் செய்வதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
மேலும் சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கும் இந்தப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.