நீர்த்தேக்க தொட்டியின் மேல் கிடந்த கழிவுகள் - ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து வ.உ.சி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது, தொட்டியின் மேல் மனித மற்றும் நாய்களின் மலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்த தகவல் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, பொதுமக்கள் அதிகளவில் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து, விரைந்து வந்த ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணியம், நவலாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, தொட்டியை முழுவதுமாக சுத்தம் செய்து பின்னர் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், அதுவரை பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலமாக இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படியுங்கள் : இலவச பேருந்து பயண திட்டம் - எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சங்கம் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கிடந்ததாக புகார் எழுந்த நிலையில், குப்பைகள் தான் அவை என்றும் மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என்றும் பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ராணிப்பேட்டையிலும் குடிநீர் தொட்டியில் மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.