கரூரில் குப்பை கிடங்கில் கடும் தீ விபத்து!
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு காலனி பகுதியில் கரூர் - வாங்கல் சாலையில் குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு இந்த குப்பை கிடங்கில் இருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. தீ மளமளவென எரிந்து பரவ தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் வாங்கல் சாலை வழியாக நாமக்கல், சேலம் சென்ற வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். குப்பைகளை அரைக்கும் இயந்திரமும் தீயில் எறிந்து சேதமானதாக சொல்லப்படுகிறது.