ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!
ஆந்திராவில் இருந்து கூரியர் மூலம் கஞ்சா வர வழைத்து, ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.tech பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மொக்க கத்தி பிரகாஷின் மகன் பிரபு. இவர் கஞ்சா பயன்படுத்துவதை தெரிந்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேளம்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கோகுல கண்ணன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதனையடுத்து, அயனாவரம் தனிப்படை போலீசார் கேளம்பாக்கம் சென்று கோகுல கண்ணனை கைது செய்தனர். பின்னர், விசாரணையில் கோகுல கண்ணன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் B.tech படிப்பை படித்துவிட்டு வண்ண மீன்கள் விற்பனைக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதையும் படியுங்கள்:நெட் தேர்வு | பாடத் திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு!
கல்லூரி படிக்கும் போது நண்பர்களோடு கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான கோகுல
கண்ணன் பல பகுதிகளில் கஞ்சா விற்பவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக
போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், படிப்பை முடித்த கோகுல கண்ணன் தனது நண்பர் ராஜேஷ் என்பவரின் மூலம் ஆந்திராவிலிருந்து உயர்ரக கஞ்சா வகைகளை கூரியர் மூலமாகவும், உயர்ரக சொகுசு காரான ஆடி கார் மூலமாகவும் வாங்கி வருவது தெரிய வந்தது.
மேலும், கஞ்சாவை ராஜேஷ் நண்பர் மூலம் செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
கல்லூரி மாணவர்களுக்கென்றால் அதிக விலையில் விற்றாலும் மாணவர்கள் வாங்குவதால் அவர்களை மட்டுமே குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். Whatsapp மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் குரூப் அமைத்து செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் கஞ்சா கேட்டு ஆர்டர் செய்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஆடி
காரில் கோகுல கண்ணன் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறிப்பாக ஆடி காரில் சென்றால் போலீசார் சோதனை செய்ய மாட்டார்கள் எனவும்
அதனால் ஆடி காரில் சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கைது
செய்யப்பட்டுள்ள கோகுல கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக ஒரு கிலோ கஞ்சா 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதும், ஆனால் கல்லூரி மாணவர்களிடம் ஒரு கிலோ கஞ்சாவை ரூபாய் 40 ஆயிரம் வரை இவர்கள் விற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கோகுல கண்ணனின் நண்பரான ராஜேஷ் என்பவர் கடந்த மாதம் கன்னியாகுமரி சென்ற போது அங்கு குற்ற வழக்கில் கன்னியாகுமாரி போலீசார் கைது செய்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட கோகுல கண்ணனிடமிருந்து 15 கிலோ உயர் ரக கஞ்சா, ரூபாய் ஒருலட்சம் பணம் மற்றும் ஒரு ஆடி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.