கங்குவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கங்குவா பெரிய வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியளவில் ரூ. 100 கோடியையும், வெளிநாடுகளில் ரூ.80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை மறுநாள் (டிச.8) படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.