விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இன்றைய தினம் தென்காசி, செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள 126 சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சிலைகள் அனைத்தும் நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக செல்லும்.
அப்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தென்காசி மாவட்டத்தில் 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசியில் 12 பள்ளிகளுக்கு மதியம் 1 மணி முதல் விடுமுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அறிவித்துள்ளார்.