விநாயகர் சதுர்த்தி - பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
சென்னை செங்குன்றம் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). இவர் பந்தல் அமைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, மாதவரம், ராஜாஜி தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலையில் பிள்ளை யார் சிலை வைத்து வழிப் பட பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் பிரசாந்த் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பிரசாந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார் பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.