கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகராக கம்பீர் நியமனம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கௌதம் காம்பீர் விளையாடினார். மேலும், கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையை பெற்றுத் தந்தார். பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்த லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
லக்னௌ அணியுடனான ஒப்பந்தம் (நவ.22 ) இன்றுடன் நிறைவடைவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து கம்பீர் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்:மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்!
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் மீண்டும் இணைந்துள்ளதாகவும், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித்துடன் கைகோர்த்துள்ளதாகவும் அந்த அணியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2011 முதல் 2017 வரை கொல்கத்தா அணியில் கம்பீர் விளையாடியுள்ளார். இதில், 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறிது காலம் கம்பீர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.