For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

08:38 PM Nov 29, 2023 IST | Web Editor
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை   இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Advertisement

இஸ்ரோ பல்வேறு முனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் உடனடி முன்னுரிமை ககன்யான் திட்டத்துக்கே என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், அதன் உடனடி முன்னுரிமை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்துக்கே. இந்த திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பத்திரமாக அழைத்து வருவதே. இதுதான் இஸ்ரோவின் முதல் முன்னுரிமை திட்டம்.

வரும் 2025-ம் ஆண்டில், 400 கிலோமீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் ககன்யான் விண்கலத்தை 3 நாட்கள் நிலைநிறுத்தி விண்வெளியை ஆய்வு செய்ய திட்டம் உள்ளது. அதற்கேற்ப, 2024-ம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரருக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க விண்வெளி நிறுவனம் உதவும். விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது இஸ்ரோவின் மற்றொரு முக்கிய திட்டம். இந்தத் திட்டம் 2028-ம் ஆண்டுக்குள் தொடங்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதையும், 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை நிறுவுவதையும் இலக்காகக் கொள்ளுமாறு கடந்த அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவிடம் கேட்டுக்கொண்டார். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான பணியான ஆதித்யா எல்1 அதன் பாதையில் உள்ளது. வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் அது லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1)-இல் நுழையும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள எல்1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும். அந்தப் பகுதியில் வைக்கப்படும் செயற்கைக்கோள், எந்த ஒரு கோளின் குறுக்கீடும் இன்றி சூரியனைப் பார்க்கும்.

சந்திராயன்-3 வெற்றி அனைவருக்கும் ஓர் உத்வேகத்தை உருவாக்கியுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு; தெற்குப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இவையனைத்தும் இந்தியாவின் அறிவியல் மற்றும் பொறியியல் திறனின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement