முதலமைச்சர் வேட்பாளர் | உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!
காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் அறிவிக்கும் நபரை மகாராஷ்டிர முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கத் தயார் என சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரின் சிவசேனை கட்சியும், துணை முதலமைச்சர் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன.
விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் அறிவிக்கும் நபரை மகாராஷ்டிர முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கத் தயார் என்று சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசியதாவது;
”மகாராஷ்டிர மாநில அரசு தங்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதுபோல தவறான விளம்பரங்களை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது. பணத்தை வைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரிடம் துரோகத்துக்கான பேரத்தை பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரத்தை காப்பதுதான் மிக முக்கியம். எனவே, காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் அறிவிக்கும் நபரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கத் தயார்” என்றார்.
இது தொடர்பாக உத்தவ் கட்சி எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ரௌத் கூறியதாவது;
'உத்தவ் தாக்கரே மிகவும் பெரிய மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளார். எந்தவித அழுத்தத்தின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. இது முழுவதும் மகாராஷ்டிர மாநிலத்தின் நலன் சார்ந்த செயல்பாடு” என்றார்.
முன்பு எதிர்க்கட்சி வெற்றிப்பெற வாய்ப்பு அதிகம் எனக்கூறப்பட்டதால், தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வந்தார். தற்போது ஹரியானாவில் பாஜக வெற்றிப்பெற்றுள்ள நிலையில் தனது முடிவை மாற்றியுள்ளார்.