For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு... அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள்

07:13 AM Jan 06, 2024 IST | Web Editor
குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு    அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள்
Advertisement

புது டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக பழங்குடியின தம்பதியினர் பங்கேற்க உள்ளனர். அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

ஜனவரி 26-ம் தேதி நமது நாட்டின் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.  குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக  பிரம்மாண்டமான அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாகவும்,  மத்திய அமைச்சரவையின் பணிகள் குறித்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.  மேலும் நாட்டில் முக்கியமான நபர்களை அரசு அழைத்து அவர்களை விருந்தினர்களாக கௌரவிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தங்களது உரிமைக்காக போராடிய பழங்குடி தம்பதியினரை அழைத்து அரசு கௌரவிக்கவுள்ளது.  அந்த வாய்ப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின தம்பதியான ஜெயபால் - ராஜலெட்சுமி தம்பதி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டம்,  வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி மற்றும்  இவரது கணவர் ஜெயபால்.  ராஜலட்சுமி ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினருக்காக தெப்பக்குளம் மேடு பகுதி நில உரிமை மீட்பு போராட்டத்தை அறவழியில் முன்னெடுத்தவர்.  அப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு அதன் விளைவாக  நில உரிமையையும் பெற்று தந்துள்ளார்.  இதன் மூலம் தனது கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார்.

ராஜலட்சுமியின் செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் அவரது கணவர் ஜெயபால்.  இவர்களின் இருவரின்  செயலை பாராட்டும் விதமாக, இருவரும் இந்த ஆண்டு புதுடெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.,களாக கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று,  மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து,  குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இவர்கள்,  குடியரசு தலைவர் தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.  அதன்பின், குடியரசு தலைவர் வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர் .

இதுகுறித்து பழங்குடியின தம்பதி ராஜலட்சுமி ஜெயபால் ஆகியோர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

” ஆனைமலை குன்று மலைத்தொடரில் கல்லார்குடி பகுதியில் பல தலைமுறைகளாக கார்டர் இன மக்கள் வசித்து வருகின்றனர் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிலச்சரிவில் கல்லார்குடி கிராமம் சிதிலமடைந்தது.  இதையடுத்து அருகில் உள்ள தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியேறினோம். அங்கு எங்களுக்கு குடியேற அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை கண்டித்து நடைப்பயணம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அறவழியில் நடத்தினோம். இதன் எதிரொலியாக எங்களுக்கு தெப்பக்குளம் மேடு பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அறவழியில் நடைபெற்ற போராட்டம் முழு வெற்றி பெற்றது.

ஒவ்வொரு அகிம்சை வழியில் போராட்டத்தின் போதும் நாங்கள் முதலில் குடியிருந்த கல்லார்குடி பகுதியில் இருந்து மண் பானையில் மண் எடுத்து வரப்பட்டு அதை வைத்து போராட்டம் நடத்தி வந்தோம். போராட்டம் வெற்றி பெற்று தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கிய பின்பு அப்பகுதியில் இருந்து பானையில் மண் எடுத்து இரண்டு பானையில் இருக்கும் மண்ணை வைத்து அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வருகிறோம்.

இந்த நிலையில் வால்பாறை அடுத்துள்ள,  கல்லார்குடி காடர்பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாங்கள் புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும், 22ம் தேதி டெல்லி செல்கிறோம்.  அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அடுத்த மாதம் 2ம் தேதி திரும்புகிறோம்.  பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களான நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த,  75வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனைமலை குன்று மலைத் தொடரில் உள்ள பழங்குடியின மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின சேர்ந்த எங்களை தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நில உரிமைக்காக போராடிய பழங்குடி தம்பதியினரின் அறவழிப் போராட்டத்திற்கான வெற்றி இது என பழங்குடி கிராமமே கொண்டாடி வருகிறது.

Tags :
Advertisement