For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரைத்துறை To அரசியல்.... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

11:08 PM Sep 28, 2024 IST | Web Editor
திரைத்துறை to அரசியல்     துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை
Advertisement

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் கடந்த 1977-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் தம்பதிக்கு மகனாக பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் படப்படிப்பு முடித்துள்ளார். 2002-ம் ஆண்டு வணக்கம் சென்னை மற்றும் காளி திரைப்படங்களின் இயக்குநரான கிருத்திகாவை காதல் திருமணம் செய்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின், முதலில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடிகர் விஜய் நடித்த `குருவி’ திரைப்படத்தை முதன் முதலாக தயாரித்தார்.  பின்னர் ஆதவன், மன்மதன் அம்பு மற்றும் 7-ஆம் அறிவு 
உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்ததோடு, ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தார்.

2009-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த `ஆதவன்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். பின்னர் 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். நடிகராகத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் , திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார்.

கதாநாயகனாக சினிமா துறையில் தடம் பதித்த உதயநிதி ஸ்டாலின், இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களிலும் நடித்தார். மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார் உதயநிதி ஸ்டாலின்.

2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பல மாவட்டங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் ஊராட்சிசபைக் கூட்டங்களை நடத்தினார். இதில் பங்கேற்று வந்தார் உதயநிதி. பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததைக் கண்டித்து அவர் ஒற்றை செங்கலை தூக்கி காட்டி பிரச்சாரம் செய்தது தேசிய அளவில் கவனம் பெற்றது.

சினிமா துறையில் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் ஜூலை 4, 2019 அன்று திமுகவின் இளைஞரணி செயலாளராக தனது முழுநேர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2021-ம் ஆண்டில், சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதேபோல, உதயநிதியும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், திமுக தலைமை இதில் அப்போது முடிவு எடுக்கவில்லை. இருப்பினும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோஷமும், எப்படியும் அவர் அமைச்சராக்கப்பட்டுவிடுவார் என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அரசியல் களத்தில் புகைந்துகொண்டே இருந்தன.

இதற்கிடையே, கடந்த 2022-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 'உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்' என முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றினார். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களிலும், 'உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்துதான் அனைத்து மாவட்டங்களில் இதே போல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிச. 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அமைச்சரானவுடன் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, இனி தான் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை செயல் மூலம் சரிசெய்து காட்டுவேன் என்றும், மாமன்னன் தான் தனது கடைசி திரைப்படம் எனவும் தெரிவித்தார். அதன்படி செயல்படுத்தியும் காட்டினார்.

இதனைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழத்தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ''வலுத்துள்ளது, ஆனால், பழுக்கவில்லை'' என்று சொல்லிவிட்டுப் போனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் செப்டம்பர் 15-ந் தேதி நடந்த திமுக பவள விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மு.க. ஸ்டாலின் விருது முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்பட்டது. விருதினைப் பெற்ற அவர், “உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? துணை முதலமைச்சராக நாங்கள் ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் 24-ம் தேதி சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், துணை முதலமைச்சர் பதவி எப்போது உதயநிதிக்கு வழங்கப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அவர் பதில் அளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

Tags :
Advertisement