'அதிர வைத்த மாநாடு முதல் பரந்தூர் விசிட் வரை' - ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை!
1984-ல் வெளியான 'வெற்றி' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் விஜய். அவர், 1992ல் எஸ்.ஏ.சி இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய். அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார்.
தொடர்ந்து கல்வி விருது வழங்கும் விழா, மருத்துவ முகாம், புயல் நிவாரணம் வழங்கும் விழா உள்ளிட்டவற்றை செய்தார். இதனிடையே விஜய்யின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், கடந்த ஆண்டு பிப்.2ம் தேதி விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து, கமிட்டான படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக விஜய் அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என அறிவித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினார். அதனைத் தொடர்ந்து செயலி மூலம் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டினார்.
கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் தீவிர அரசியலில் களம் இறங்காமல் அறிக்கைகள் மூலமே விஜய் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் தவெகவின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை விஜய் அறிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பேர் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதில் தன்னுடைய அரசியல் பாதை எப்படி இருக்கும், கட்சியின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை தொண்டர்கள் மத்தியில் விஜய் எடுத்துரைத்தார். மாநாட்டில் விஜய் பேசியது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அவர் பேசியதில் கொள்கை முரண் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
மாநாடு முடிந்ததும் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்பதில் உறுதியாக இருந்த விஜய் அந்த இடைத்தேர்தலை நிராகரித்தார்.
அறிக்கையின் மூலம் கண்டனங்கள் தெரிவிப்பது, எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து சொல்லுவது, பாதிக்கப்பட்டவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவது என அரசியலில் விஜய் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' செய்வதாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை விஜய் அதிரடியாக நேரில் சந்தித்தார். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
தன்னுடைய கொள்கை தலைவர் என்று விஜய் சொன்ன பெரியாரை சீமான் கொச்சையாக பேசியதையும் விஜய் கண்டுக்காமல் இருப்பது அவர் மீதான விமர்சனத்தை வலுப்படுத்தியது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தன்னுடைய கொள்கை தலைவர் என்று விஜய் சொன்ன பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு விஜய் கண்டனம் தெரிவிக்காமல் இருந்தது அவர் மீதான விமர்சனத்தை வலுவாக்கியது.
இதற்கிடையே, விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவும், அதிமுகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமாரும் தவெகவில் முக்கிய பதவியில் இணைந்திருப்பது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
திமுக அரசை எதிர்க்கும் அதே வேகம் மத்திய அரசை எதிர்க்கும் போது விஜயிடம் இல்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை விஜய் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம் என ஆவேசமாக விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், விஜய் இதுவரை தவெகவின் 5 கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம்… வெற்றி நிச்சயம்” என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார். தவெக தலைவர் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? எப்போது தீவிர அரசியலில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.