தனி வழி முதல்... பவுன்சர்கள் வரை... தவெக மாநாட்டின் வியூகங்கள்...
தவெக மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும், கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வருகிற 27-ம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பார்கிங், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மின்விளக்குகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 300-க்கும் ஏற்பட்ட கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் மாநாடு நடைபெறும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது மாநாடு நடைபெறும் இடத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் யாரும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தற்போது மேலிடம் உத்தரவு போட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அன்றைய தினம் பட்டாசுகளை மாநாடு நடைபெறும் இடத்தில் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக மாநாட்டு திடலுக்கு வருவதாக ஏற்கனவே போடப்பட்டிருந்த பாதையில் விஜய் வரப்போவதில்லை எனவும், ரோஜா கார்டன் வழியாக மாநாட்டு மேடைக்கு வருவதற்கு புதிதாக தனி பாதை போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 85 ஏக்கர் மாநாட்டு திடல் முழுவதும் பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு விஜய் வரவுள்ள கார் அவருடைய கார் இல்லை என்பதும், மாநாடு முடிந்து திரும்பி செல்லும் பொழுது அவர் வந்த கார் இல்லாமல் மற்றொரு காரில் வெளியே செல்ல உள்ளதாகவும் தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.