தமிழ்நாட்டு தளபதிகள்..... திரை தளபதி To அரசியல் தலைவர்... 2026ல் களமிறங்கும் விஜய்?... அழகிரிசாமி முதல் விஜய் அண்ணா வரை.....
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதன் வெற்றி விழா சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்களில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் அர்ஜுன், விஜய் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பெருந்தீனியை அள்ளிப்போட்டார்.
ரசிகர்களை நெகிழ வைத்த பேச்சு:
விழாவில் பேசிய நடிகர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பி. இவ்ளோ நாள், நான் தான் உங்களை என் நெஞ்சுக்குள்ள வச்சுருகேன்னு நினைச்சேன். இப்போது தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னோட தோலை செருப்பாக தைத்து கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்...’’ என்று உணர்ச்சி பொங்க பேசினார். தொடர்ந்து பேசுகையில், ‘’சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. இது ஏன் என்று கேள்வி எழுப்பியவர். ’’இவ்வளவு கோபம் நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா.... நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது..’’ என்று சாந்தப்படுத்தினார்.
யானை பிழைத்த வேல் ஏந்தல்...
இதையடுத்து ஒரு குட்டிக் கதை சொல்ல தொடங்கினார். அதில், ‘’ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு.... என்றதும் ரசிகர்கள் குரல் கொடுக்கவே. . காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன் பா.... என்று கூறிவிட்டு, கதையைத் தொடர்ந்தார். ’’ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். இந்த ரெண்டும் பேரும் ஊருக்கு திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி...?. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி பெற்றவர். ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெற்றி பெற முடியுமோ, அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. பெரிதினும் பெரிது கேள்....’’ என்று கூறி அடுத்த வியூகம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.
2026 தேர்தல் இலக்கா...?
தொடர்ந்து, ’’புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். தளபதி-ன்னா..... என்று கேட்டு சிறு இடைவெளி விட்டு உங்களுக்கே தெரியும். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி....நீங்கள் ஆணையிட்டால் நான் அதை செய்து முடிப்பேன். என்றார். இதைத் தொடர்ந்து, 2026 குறித்த கேள்விக்கு "அந்த ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கிறது... என்றவர் ’கப்பு முக்கியம் பிகிலு,..." என்கிற பிகில் பட வசனத்தை சொல்லி கைதட்டலை வாங்கினார். இப்படி அவர் சொன்னதற்கும் அரசியல் அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து விஜய் களமிறங்குகிறார். அதைத்தான் இப்படி சொல்லியுள்ளார் என்கிறார்கள். இதை உறுதிப் படுத்தும் வகையில், அந்த விழாவில் பேசிய நடிகர் அர்ஜுன், ’’தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் விஜய்க்கு உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்றார்.
திராவிட இயக்க தளபதிகள்...
ஆக... மன்னர்களாகிய மக்கள் போடும் உத்தரவை நிறைவேற்றும் தளபதி நான் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். இதற்கும் அரசியல் பின்னணி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தளபதி என்கிற அடைமொழி இயக்கத்தின் இளம் தலைவர்... அடுத்த தலைவர்... தலைவரின் பேரன்பைப் பெற்றவர் என்பதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரராக பங்கேற்றவர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் என்று நடத்தியவர். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பின்னர், அவருடன் இணைந்து இறுதி வரை பயணித்தவர். குறிப்பாக, இந்தித் திணிப்புக்க்கு எதிராக திருச்சியில் தொடங்கி சென்னை வரை நடைபயணம் சென்றவர். அழகிரியின் மேடைப் பேச்சில் அனல் வீசும். மேடையில் மட்டுமல்ல களத்திலும் அசராத போராளியாக திகழ்ந்த அவரை தளபதி, அஞ்சா நெஞ்சன் அழகிரி என்றே தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அழைத்தனர்.
தமிழர் தளபதி
பட்டுக்கோட்டை அழகிரி போல் பெரியாரின் போர்ப்படைத் தளபதியாக பார்க்கப்பட்டவர் அண்ணா என்று திராவிட இயக்கத்தினரால் அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. திராவிடர் கழகத்தில் இருந்த வரை அண்ணாவை தளபதி என்றே அழைத்தனர். தி.க.விலிருந்து விலகி திமுக-வை அண்ணா தொடங்கிய போதும், எங்கள் தலைவர் பெரியார்தான் என்று அண்ணா குறிப்பிட்டார். கடந்த 1967ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும், இந்த ஆட்சி பெரியாருக்கு சமர்ப்பணம் என்றார் அண்ணா.
பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா மட்டுமின்றி பழையகோட்டை அர்ச்சுனன் உள்ளிட்டோரும் திராவிட இயக்க தளபதிகளாக அழைக்கப்பட்டனர். திராவிடர் கழக தலைவராக பெரியார் இருந்த போது அவரை தமிழர் தலைவர் என்றும் கி.வீரமணியை தமிழர் தளபதி என்றும் அழைத்தனர். பெரியார் மறைவிற்கு பின்னர் தி.க தலைவராக கி.வீரமணி பொறுப்பேற்றார். இதையடுத்து அவரை தமிழர் தலைவர் என்று அழைக்கத் தொடங்கினர்.
தளபதியான மு.க.ஸ்டாலின்
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க தொடங்கி திமுக இளைஞரணியின் முதல் மாநிலச் செயலாளராகினார் மு.க.ஸ்டாலின். இளைஞரணியை வலுவான அமைப்பாக்கினார். இதையடுத்து தளபதி என்று திமுக-வினர் அழைக்கத் தொடங்கினர். அவர் கட்சியின் பொருளாளர், தலைவர் என உயர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், தளபதி என்றே மூத்த நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை அழைக்கின்றனர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தளபதியாக அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படுவர் என அனைவரும் மிக முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளனர். அண்ணா தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை முதலமைச்சராகவும் ஆகியுள்ளனர்.
தளபதி To தலைவர்
இந்நிலையில், திரைத்துறையில் இளைய தளபதி பட்டம் நடிகர் பருத்தி வீரன் சரவணனுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அதை அவர் தொடர்ந்து பயன்படுத்தவில்லை. பின்னர் நடிகர் விஜய்க்கும் இளைய தளபதி பட்டம் கொடுக்கப்பட்டது. இளைய தளபதி பின்னர் தளபதி என்று அழைக்கப்பட்டார். அதுவே தற்போது வரை தொடர்கிறது.... இந்நிலையில், விஜயின் லியோ வெற்றி விழா பேச்சில் குறிப்பிட்ட தளபதி பேச்சுடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். அவரின் இலக்கும்...வியூகமும் புரியும். அது ரசிகர்களுக்கு புரிந்துள்ளது.... திரையில் தளபதியாக அழைக்கப்படும் விஜய, விரைவில் அரசியலில் தலைவர் ஆவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
- ஜோ மகேஸ்வரன்