இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் புதிய திட்டம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படவுள்ள "தாயுமானவர் திட்டம்" வரும் 12 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்குவதாகும்.
இத்திட்டத்தின் மூலம் 21,70,454 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். ரேஷன் பொருட்கள் இனி பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாக கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படும்.
இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவோ, சிரமப்படவோ தேவையில்லை.உடல்நலக்குறைவால் அவதிப்படும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இத்திட்டம் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அரசு சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கிறது.இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், சமூக நலனில் அக்கறை கொண்ட அரசின் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் செலவிடும் நேரம் மற்றும் சக்தியைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.