இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமே 3 முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் அவ்வளவு வலிமையானது. திரையில் நீதிக்காக போராடுபவர்கள் அரியணையில் அமர்ந்த பின்னும் அதையே செய்வார்கள் என்ற பின்பம் தமிழ்நாட்டில் சற்று கூடுதலாக பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனவர்கள் அங்கு ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். இந்த வரிசையில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்களா? மாட்டார்களா? என தமிழ்நாடு எதிர்பார்த்த இவரும் ரஜினிகாந்த் மற்றும் விஜய். ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த நிலையில், இன்று (பிப். 02) நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய்க்கும் திரைத்துறைக்கும், அரசியலுக்கும் இடையேயுள்ள பிணைப்பை காணலாம்...
திரைத்துறையும் நடிகர் விஜய்யும்:
நடிகர் விஜய் தன்னுடைய 10-வது வயதிலேயே படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். விஜய்யின் நடிப்பில் ‘வெற்றி’ என்ற படம் கடந்த 1984-ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அப்போதே தயாரிப்பாளரும் நடிகருமான பிஎஸ் வீரப்பாவிடம் இருந்து 500 ரூபாய்க்கான செக்கை பெற்றுள்ளார் விஜய். இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாழ்க்கையில் வெற்றி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. அதிகமான முயற்சிகளை தொடர்ந்தே தற்போது ரசிகர்கள் கொண்டாடும் தளபதியாக நடைபோட்டு வருகிறார். 1992-ம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அப்போது அவருக்கு வயது 18. எனினும் அப்படத்தில் விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே முன்னிறுத்தப்பட்டார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சிகரமான படங்கள் எடுப்பதற்கு பெயர் பெற்றவர் ஆவார். சட்டம் ஒரு இருட்டறை, நீதியின் மறுபக்கம், நான் மகான் அல்ல என விஜயகாந்த், ரஜினியை வைத்து இயக்கிய படங்கள் பெரும்பாலும் சமூக அவலங்களை நோக்கி கேள்விகளை எழுப்பின. குறிப்பாக விஜயகாந்திற்கு புரட்சிகரமான பல வசனங்களை எழுதி, அவரது அரசியல் எண்ட்ரிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் என்று எஸ்.ஏ.சந்திரசேகரை திரைத்துறையில் கூறுவார்கள்.
கதாநாயகனாக விஜய்:
இதனிடையே, தன்னுடைய மகன் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் போதும் விஜய்க்கும் ரஜினி, விஜயகாந்த் பாணியில் கதை அமைத்து, அவரையும் ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க விரும்பினார் எஸ்.ஏ.சி. அந்த வகையில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அநீதியை எதிர்க்கும் ஒரு கல்லூரி மாணவனாக புரட்சி பேசும் கேரக்டரில் நடித்தார் விஜய். ஆனால் விஜய்க்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத்தந்து காதல் படங்கள் தான்.
காதல் படங்களுக்கு நடுவே ‘தமிழன்’ படத்தில் சமூக பிரச்னையை பேசும் ஒரு வழக்கறிஞராக நடித்தார் விஜய். நீதி தொடர்பாக படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ஆன எஸ்.ஏ.சி, தன் மகனுக்காக தமிழன் படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்தார். எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் விஜய்யை முன் நிறுத்தி எடுக்கப்பட்ட படமே தமிழன் என்பது அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்தாலே தெரியும்.
என் நெஞ்சில் குடியிருக்கும்:
இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த அனைத்துமே ஆக்ஷன் படங்கள் தான். இதில் பெரும்பாலான படங்கள் வசூல் சாதனை புரிந்து ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் படையை கொண்ட நாயகனாக விஜய்யை உயர்த்தியது. ரஜினி பாணியில் ஒவ்வொரு முறை மேடை ஏறும் போதும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என அன்பான ரசிகர்கள்’ எனக்கூறி பேசுவதை வழக்கமாக மாற்றினார் விஜய். இப்படி திரையிலும், திரைக்கு வெளியிலும் ரஜினி வழியை பின் தொடர்ந்ததாலோ என்னவோ, ரஜினியைப் போல விஜய்யும் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.
அரசியல் நோக்கம் இல்லை:
2008-ம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சம் பெற்ற காலகட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற விஜய், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டார். அதன்பின் ஒரு வாரம் கழித்து தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள், உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை தெரிவிக்கும் போராட்டம் இது, இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று பேசினார்.
அரசியல் அடித்தளம்:
நடிகர் விஜய் இலங்கை தமிழர்களுக்காக விஜய் தன் ரசிகர்களுடன், நடத்திய உண்ணாவிரத போராட்டம், அவரின் அரசியல் எண்ட்ரிக்கான அடித்தளம் என்று பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2009-ம் ஆண்டு, தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் அதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய்க்கு திடீரென டெல்லியில் ராகுல் காந்தியிடம் இருந்து எதிர்பாராத அழைப்பு வந்தது.
தொடர்ந்து விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சி-யும் ராகுலை சந்தித்து திரும்பியதும், காங்கிரஸ் உடன் அவர் கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுகள் எழத் தொடங்கின. அந்த நேரத்தில் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு விஜய்க்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. அரசியல் ரீதியாக விஜய் சந்தித்த முதல் நெருக்கடி இதுதான்.
விஜய் மக்கள் இயக்கம்:
காவலன் சமயத்தில் திமுகவினர் உடன் ஏற்பட்ட மோதல், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக-விற்கான ஆதரவு நிலையாக மாறியது. திமுக உடன் விஜய்க்கு இருக்கும் அதிருப்தியை அறிந்த ஜெயலலிதா, எஸ்.ஏ.சி-யை அழைத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவிடம் மக்கள் இயக்கத்தினருக்காக 15 சீட்கள் தான் கேட்டதாகவும், அதற்கு ஜெயலலிதா நோ சொல்லிவிட்டதாகவும் எஸ்.ஏ.சி சொன்னார்.
டைம் டு லீடு
அதிமுக அந்த தேர்தலில் வெற்றி பெற்றது. அதிமுகவின் இந்த வெற்றி குறித்து பேட்டி அளித்த எஸ்.ஏ.சி, ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல், அதிமுகவின் வெற்றிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியதாக தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க, அதுவரை மறைமுகமாக படங்களில் அரசியல் பேசி வந்த விஜய், ‘தலைவா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தது முதல், அதில் ‘டைம் டு லீடு’ என வசனம் பேசியது மட்டுமின்றி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெள்ளை சட்டை அணிந்து வந்து மக்களை நோக்கி கையசைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது என அந்த சமயத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது விஜய்யின் இந்த படம்.
அது மட்டுமின்றி படத்தில் நீங்கள் தான் எங்கள் அடுத்த அண்ணா என்பது போன்ற அரசியல் வசனங்கள் அன்றைய ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தலைவா படம் வெளியானால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனக்கூறி அப்படத்தை வெளியிட அன்றைய அதிமுக அரசு தடை விதித்தது. படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், எங்கள் தளபதியின் படத்தை பார்த்து அரசியல் கட்சி பயப்படுகிறது என்று மார்தட்டிக் கொண்டார்கள்.
சர்கார்
திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளை பகைத்துக் கொண்ட விஜய், இதையடுத்து ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து வசனம் பேசியதற்காக பாஜகவினரின் கடும் எதிர்ப்புகளை பெற்றார் விஜய். அந்த சமயத்தில் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த விஜய், அடுத்து வெளிவந்த ‘சர்கார்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிரடியாக பேசினார். அதில் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறி அதிரடி காட்டினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க இரவோடு இரவாக தூத்துக்குடி வந்து, தன் ரசிகர்களுடன் பைக்கில் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினார் விஜய். இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தார் விஜய். இதையடுத்து தொடர்ந்து படங்களிலும், ஆடியோ லாஞ்சிலும் அரசியல் பேசி வந்தார் விஜய்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா
பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்காக கல்பாக்கம் சென்ற விஜய், அங்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் ஒரு மாஸ் ஆன செல்பி எடுத்து தன் படை பலத்தை காட்டினார். இதையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் உண்மையாக இருப்பதை விட ஊமையாக இருக்க வேண்டும் எனக் கூறி அரசியல் பேசாமல் நழுவிக் கொண்டார்.
அதன்பின்னர் தனது அரசியல் நகர்வுகளை சைலண்டாக செய்யத்தொடங்கிய விஜய், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி அளித்தார். அந்த தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றது விஜய்க்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்பு மட்டுமின்றி வாக்காளர்கள் விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பாராட்டு, பயிலகம் வரிசையில் நூலகங்களையும் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியது. இவை அனைத்திலும் 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
அரசியல் பக்கம் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்ட விஜய், சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை கெளரவிக்க மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தினார். அதில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என நாளைய வாக்காளர்களிடம் விதையை விதைத்து அரசியல் வருகையை ஆணித்தனமாக அறிவித்தார் விஜய். மேலும், அண்மையில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா்.
அரசியல் எண்ட்ரி:
சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியலைச் சந்திக்க விரைவில் தன் கட்சியைப் பதிவு செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் கட்சிக்கு, ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்துள்ளதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
தமிழக வெற்றி கழகம்:
இதுகுறித்து மெளனம் காக்கப்பட்டு வந்த நிலையில், இன்று புதிய கட்சிக்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.