சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை... இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?
இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி ஆகும். இதில் அதிகபட்சமாக ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சராக முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர்கள்தான் இந்தியாவின் முதல் மூன்று பணக்கார முதலமைச்சர்கள் ஆவர்.
ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன், இந்தியாவின் ஏழ்மை முதலமைச்சராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக உமர் அப்துல்லா ரூ.55 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவதாக ரூ.1 கோடி சொத்துக்களுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
31 முதலமைச்சர்களில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அதிஷி மட்டுமே பெண் முதலமைச்சர்கள். மேலும் இந்திய முதலமைச்சர்களில் 13 பேர் குற்றவியல் வழக்குகள் உள்ளன. நாட்டில் மொத்தமுள்ள முதல்வர்களில் 13 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில் 10 பேர் மீது கொலை, கடத்தல், ஊழல் போன்ற தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் உள்ளன.
2023- 2024 இல் இந்தியாவின் தனிநபர் வருமானம் தோராயமாக ரூ.1,85,854 ஆக இருந்த நிலையில், ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ.13,64,310 ஆகும். இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம்.