'எருமை முதல் தங்க கிரீடம் வரை'... ஈட்டி வாங்க காசில்லாது தவித்த அர்ஷத் நதீம் பரிசு மழையில் நனைகிறார்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு பலரும் பல பரிசுகளை வழங்க முன்வந்துள்ளனர்.
பாரிஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு நிறைவடைந்தது. முன்னதாக இதில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக்கில் அதிகப்பட்ச தூரத்துக்கு எறிந்த வீரர் என்ற சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தங்கப் பதக்கத்துடன் நேற்று நாடு திரும்பிய அர்ஷத் நதீமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் எருமை மாடு மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக பார்க்கக்கூடிய நிலையில் நதீமின் மாமனார் (மனைவியின் தந்தை) அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசளித்துள்ளார்.
இதற்கிடையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்த சாதனைக்காக, அர்ஷத் நதீமுக்கு உலக தடகள கூட்டமைப்பு 50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.41,97,650) வழங்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி, சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருக்கிறார். தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர் சர்தார் சலீம் ஹைதர் கான், பாகிஸ்தான் மதிப்பில் ரூ.20 லட்சத்தை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சுக்கூரில் கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்திற்கு 'அர்ஷத் நதீம் மைதானம்' என்று பெயரிடப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, ஜாஃப்ரியா பேரிடர் மேலாண்மை நல அமைப்பின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் நதீமுக்கு புதிய சுஸுகி ஆல்டோ காரை பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நதீமுக்கு ஒரு கார், வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருள் வழங்கப்படும் என ‘கோ’ பெட்ரோல் பம்ப் சி.ஓ.ஓ ஜீஷன் தயாப் அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, இரண்டாவது உயரிய விருதான ஹிலால்-இ-இம்தியாஸை நதீமுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படி பரிசு மழையில் நதீம் நனைந்து வருகிறார். ஈட்டி வாங்க காசில்லாமல் தவித்த ஒரு விளையாட்டு வீரன் தான் அர்ஷத் நதீம் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.