’அகண்டா 2’ முதல் ’படையப்பா’ ரீரிலீஸ் வரை ; இந்த வாரம் வெளியான படங்களின் மினி ரிவியூ...!
கோலிவுட்டை பொருத்த வரை ஓவ்வொரு வெள்ளிக் கிழமையும் வார விடுமுறையையொட்டி திரைப்படங்கள் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா..2 தாண்டவம், விமல் நடித்த மகாசேனா, லியோ சிவகுமார் நடித்த மாண்புமிகு பறை மற்றும் புதுமுகங்கள் நடித்த யாரு போட்ட கோடு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இத்தொகுப்பில் காண்போம்...!
அகண்டா 2 தாண்டவம்
சீனாவை சேர்ந்த இரண்டு ராணுவ தளபதிகள் இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவில் கொடூர வைரசை பரப்பி, கோடிக்கணக்கான மக்களை கொல்ல நினைக்கிறார்கள். புனிதமான கயிலாய மலையை தகர்க்க பிளான் போடுகிறார்கள். இமயமலையில் தவத்தில் இருக்கும் தீவிர சிவபக்தரான பாலகிருஷ்ணா தனது அதிரடி ஆக்சனால் அதை எப்படி தடுக்கிறார் என்பது அகண்டா 2 தாண்டவம் படத்தின் கதை. இப்படத்தை போயபடி சீனு இயக்கி உள்ளார்.
அதிரடி சிவபக்தன், அவர் தம்பி எம்.எல்.ஏ என இரட்டை வேடத்தில் வருகிறார் பாலகிருஷ்ணா. இரண்டு பேருமே சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார்கள். கஞ்சா வியாபாரம் செய்யும் வில்லன்களை பிரித்து மேய்ந்துவிட்டு , ஒரு குத்துபாடலுக்கு யூத் மாதிரி டான்ஸ் ஆடிவிட்டு, செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா.
இமயமலை சாமியாராக வரும் பாலகிருஷ்ணா என்ட்ரி முதல் கிளைமாக்ஸ் வரை அனல் பறக்கும் பன்ச் டயலாக் பேசுகிறார். அதை விட அனல் பறக்க சண்டை போடுகிறார். சூலாயுதத்தால் ஹெலிகாப்டர் றெக்கையை சுற்றுகிறார். நாலைந்து பேரையும் அதில் வைத்து சுற்றி மாஸ் காண்பிக்கிறார். வில்லன் ஆட்களை விதவிதமாக துவம்சம் செய்கிறார். இந்திய வில்லன் டீம், சீன வில்லன் டீமை மட்டுமல்ல, ரோபாக்களை கூட அடித்து அலற வைக்கிறார். அகண்டா 2 படத்தின் ஹைலைட்டே ஆக்ஷன் சீன் தான். வசனங்களிலும் அனல் பறக்குகிறது. ஹீரோயினாக வரும் சம்யுக்தாமேனன் டான்ஸ், நாட்டுப்பற்று சீன்கள் நச். பாலகிருஷ்ணா மகளாக நடித்துள்ள ஹர்சாலி கியூட் ஆக இருக்கிறார். வில்லன்களாக ஆதி, கபீர்சிங் மிரட்டுகிறார்கள். சீன வில்லன்கள் மிரட்டல் தனி ரகம். தமன் மியூசிக், சாங் படத்தை ஸ்பீடு ஆக்குகிறது. ராம், லட்சுமணின் சண்டை காட்சிகள் செம.
அக்மார்க் பாலகிருஷ்ணா ஸ்டைல் தெலுங்கு படம் என்பதால் லாஜிக் பார்க்காமல், பாலகிருஷ்ணா நடிப்பை, அவர் ஹீரோயிசத்தை மட்டும் ரசித்தால் ,படத்தை ரசிக்கலாம். மற்றபடி, பக்கா இந்துத்துவா படம், கதையில் இந்து மதம், சனாதன தர்மம் ஆதரவாக ஏகப்பட்ட காட்சிகள், வசனங்கள் உள்ளன.
மகாசேனா
விமல் வசிக்கும் மலை கிராமம் கோயில் இருக்கும் யாளி கடவுளின் சிலையை, வில்லி மகிமா தலைமையிலான குரூப்பும், வில்லன் கபீர் சிங்கின் இன்னொரு குரூப்பும் அபகரிக்க நினைக்கிறது. விமல் மற்றும் ஊர்க்காரர்கள் சேனா உதவியுடன் சிலையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மகாசேனா படத்தின் கதை. சேனா என்பது விமல் வளர்க்கும் யானை.
இப்படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியிருக்கிறார். மகள் மீது அன்பு, யானை மீது பாசம், யாளி சிலை மீது பக்தி, வில்லன் மீது கோபம் என ஓரளவு சிறப்பாகவே நடித்து இருக்கிறார் விமல். அவருக்கான காட்சிகளும் , வசனங்கள் குறைவாக இருக்கிறது. அவர் மனைவியாக வரும் சிருஷ்டிடாங்கே வீரம் மிக்க மலை வாழ் பெண்ணாகவே நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவர் மகளாக வரும் அல்லி சீன் கள் உருக்கம்.
வில்லன் போலீசாக வரும் ஜான் விஜய் வழக்கம்போல் ஓவர் ஆக்டிங். கார்ப்பரேட் வில்லன் கபீர் நடிப்பு ஓகே, வில்லியாக வரும் மகிமா குப்தாவை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு கல்லுாரி டீமுக்கு மலையில் வழிகாட்டியாக வருகிறார் யோகிபாபு. ஆனால், காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. பல தேவையற்ற சீன்கள், வசனங்கள் வேகத்தடையாக இருக்கிறது. யானை சம்பந்தப்பட்ட காட்சிகள், கிளைமாக்ஸ் ஓகே. ஆனாலும், கிளைமாக்ஸ், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.
மாண்புமிகு பறை
பறையிசை கலைஞனரான லியோசிவகுமார் (பட்டிமன்ற பேச்சாளர் லியோனி மகன்) காதல் திருமணம் செய்கிறார். அவர் ஒரு நிகழ்ச்சிக்காக செல்லும்போது, ஒரு கும்பல் அவர் நண்பரை கொடூரமாக கொல்கிறது. அவரையும் கொல்ல துரத்துகிறது. அவர்கள் யார் ? என்ன பிரச்னை? லியோ சிவகுமார் மனைவியான காயத்ரி ரெமா சில இழப்புகளுக்குபின் என்ன அதிரடி முடிவெடுக்கிறார். இதுதான் எஸ்.விஜய்சுகுமார் இயக்கிய மாண்புமிகு பறை படக்கரு.
பறையிசை கலைஞர்கள் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பறை மீதான அவர்களின் காதல், சமூக ஏற்றத்தாழ்வுகளை கிராமத்து பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். லியோசிவகுமார் நடிப்பு, கோபம், ஏமாற்றம், குடும்ப காட்சிகள் படத்தை அழகாக்கி இருக்கிறது. நட்பு, குடும்ப காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் தனித்துவ நடிப்பை தந்து இருக்கிறார். காயத்ரி ரெமாவின் கிளைமாக்ஸ் நடிப்பு, அவர் எடுக்கும் முடிவு தனி புரட்சி. ஹீரோ நண்பராக வரும் ஆர்யனும் நன்றாக நடித்து இருக்கிறார். ஆனாலும், திரைக்கதை தத்தளிக்கிறது.
கிளைமாக்சில் சொல்ல விஷயத்தை இன்னும் வீரியமாக, விரிவாக சொல்லியிருக்கலாம். ஜாதி மாறி, காதல் திருமணம் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை, குடும்பத்தினர் மனநிலையை , பல நிஜ சம்பவங்கள் பின்னணியில் சொல்லியிருப்பதும், பறை இசை கலைஞர்களின் வாழ்வியலையும் இயல்பாக காண்பித்து இருப்பதும் படத்தின் பிளஸ், ஆனாலும் படம் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு.
யாரு போட்ட கோடு
பள்ளி ஆசிரியரான ஹீரோ பிரபாகரன் மாணவர்களுக்கு கல்வி சொல்லி கொடுப்பதுடன், ஊரில் இருக்கும் தவறான விஷயங்களை தட்டிக்கேட்கிறார். போராட்டம் செய்து மதுக்கடைகளை அகற்றுகிறார். இதனால் பாதிக்கப்படும் வில்லன் லெனின் வடமலை, வாத்தியாரையும், அவர் காதலிக்கும் ஹீரோயின் மேகாலியையும் பழி வாங்க துடிக்கிறார். அவர்களுக்கு என்ன நேர்ந்தது? வில்லன் திருந்தினாரா? சாதி பாகுபாட்டால் இப்போதும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை சொல்லும் படம்.
வில்லனாக நடித்த லெனின் வடமலையே படத்தை இயக்கியிருக்கிறார். ஆசிரியர் வேலை மற்றும் ஹீரோ வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார் பிரபாகரன். ஆசிரியராக வரும் மேகாலி நடிப்பு கச்சிதம். வில்லன் மகனாக வரும் துகின் சேகுவரா கேட்கும் கேள்விகள், சமூகத்தை கிண்டல் செய்யும் வசனங்கள் பிரஷ். அவர் அம்மாவாக வரும் வினிதா கோவிந்தராஜனும் மனதில் நிற்கிறார். கிராமப்புறங்களின் நிலவும் ஜாதி பிரச்சனை, இரண்டு ஆசிரியர்களின் நல்ல குணம் ஆகியவற்றை பேசும் விழிப்புணர்வு படமாக வந்துள்ளது. மாணவன் மூலமாகவே ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்திற்கு சவுந்தர்யன் இசையமைத்து இருக்கிறார்.
படையப்பா (ரீரிலீஸ்)
இந்த வாரம் வெளியான நாலு படங்களை விட, தமிழகத்தில் வசூலில் பின்னி எடுப்பது 25 ஆண்டுகளுக்குபின் வெளியாகி இருக்கும் ரஜினி, சவுந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் நடித்த படையப்பாதான். ரஜினியின் 75 பிறந்தநாள் பரிசாக வெளியாகி இருக்கும் படையப்பாவை ரஜினி ரசிகர்களுக்கும், இதற்கு முன்பு அந்த படத்தை பார்க்காதவர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம்