ஆடி முதல் வெள்ளி...அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.
அந்த வகையில், இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதன்படி, மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்தனர். கோயில்களில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.