"ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,
"800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் கட்டப்படும்.
மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும். தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். "
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.