ஜெர்மனி பிரதமராகும் பிரெட்ரிக் மெர்ஸ்... யார் இவர்?
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சரை, பிரதமர் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி சார்பில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கூட்டணியில், அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றன. மூன்றாவதாக தீவிர வலதுசாரியான ஏ.எப்.டி., கட்சி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். நேற்று முன்தினம் (பிப்.23) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தமுள்ள 630 இடங்களில், பழமைவாத கூட்டணி 208 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக தீவிர வலதுசாரியான ஏ.எப்.டி., கட்சி 152 இடங்களை பிடித்துள்ளது. ஆளும் சமூக ஜனநாயக கட்சி 120 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து, பழமைவாத கூட்டணி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாணியில், சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரெட்ரிக் அளித்த வாக்குறுதியே, அவரது வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
யார் இந்த பிரெட்ரிக் மெர்ஸ்?
புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் பிரிலோன் நகரில் 1955-ம் ஆண்டு பிறந்தார். 1972-ல் சிடியு கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு சட்டம் பயின்றார். 1981-ல் சார்லெட் மெர்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சார்லெட் மெர்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
1989-ம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1994-ல் ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். 2000-ம் ஆண்டில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த மெர்ஸ் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார்.
2009-ல் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய அவர், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் நுழைந்து, அடுத்த ஆண்டே கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தற்போது ஜெர்மன் பிரதமராகவும் தேர்வாகியிருக்கிறார்.