பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் 2ம் சுற்று - சென்னை, புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு!
பிரான்ஸ் நாடாளுமன்ற இறுதிகட்ட தோ்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் வலதுசாரி கூட்டணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தை பொறுத்தவரை 577 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்றில் 12.50 சதவீத வாக்குகளை பெரும் வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள். இந்தச் சூழலில் 76 தொகுதிகளில் முதலிடம் பிடித்தவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாததால் 76 எம்பிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டனர்.
இதனையடுத்து மீதமுள்ள 501 தொகுதிகளுக்கு இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று
நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு தூதரகத்தின் சார்பில் புதுச்சேரி, சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த வாக்குச்சாவடிகளில் 4,550 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடையும். பின்னர் இரவு 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.