சரக்கு ரயில் தீ விபத்து - ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்துக்குள்ளானது. இதனை தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் ரயில்வே துறை ஊழியர்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இதன் காரணமாக ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் தீயினால் சேதமான மின் கம்பங்கள் மற்றும் தண்டவாளங்கள், டேங்கர் ரயில் பெட்டிகளை ஒரு பகுதியில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர், ஆலப்புழா ஆகிய விரைவு ரயில்கள் குறைவான வேகத்தில் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. மேலும் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கத்திலும் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்த சரக்கு டேங்கர் ரயில் பெட்டிகள் ராட்சச கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன.
தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்குவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் ரயில்வே துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இரவு 10:10 மணி முதல் திருவனந்தபுரம்,மங்களூர், ஆளப்புழா, பாலக்காடு உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் குறைவான வேகத்தில் அரக்கோணம் மார்க்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இரண்டாவது பாதையும் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.