For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மீண்டும் தொடக்கம்!

09:49 AM Apr 29, 2024 IST | Web Editor
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மீண்டும் தொடக்கம்
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ்,  பிஎஸ்எம்எஸ்,  பிஏஎம்எஸ்,  பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்,  கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.  அந்த வகையில்,  இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.  தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.   இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி,  மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்தத் தோ்வுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 13,200 மாணவ,  மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.  அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும்,  சென்னையில் 827 மாணவா்களும்,  திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.   இவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது.

இதற்காக மாவட்டவாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல்,  வேதியியல்,  தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.  பாடங்களுக்கான பயிற்சிகள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது.  மாணவா்களுக்கு பயிற்சி வகுப்புகளின்போது காலை சிற்றுண்டி,  தேநீா் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன.  ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.  இந்த பயிற்சி வகுப்புகள் பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement