மக்களவைத் தேர்தலை ஒட்டி கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்! எங்கு தெரியுமா?
கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை கட்டணமின்றி பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கட்டணமின்றி பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
"19.04.2024 அன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் நமது போக்குவரத்து கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி 19.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.