சரக்கு போக்குவரத்துக்காக, 'OptRoute' என்கிற இலவச செயலி அறிமுகம்! சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது!!
நாடு முழுதும் சரக்கு போக்குவரத்துக்காக, 'OptRoute' என்ற இலவச செயலியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இணைந்து, நாடு முழுதும் பயன்படும் வகையில், சரக்கு போக்குவரத்துக்கு உதவும், மொபைல்போன் செயலியை வடிவமைத்து உள்ளனர். இந்த செயலியை பயன்படுத்த, எந்த வித தரகு கட்டணமோ, இதர கட்டணங்களோ கிடையாது. இடைத்தரகர்கள் இல்லாமல், வாகன ஓட்டுனருக்கே நேரடியாக வாடகை கட்டணம் சேரும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைபேராசிரியர் நாராயணசாமி கூறுகையில், 'OptRoute' செயலி, சரக்கு ஏற்றுதல், ஓட்டுனர்கள், வாடிக்கையாளர்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும். மேலும், வாகன ஓட்டுனர்களுக்கு சரக்கு இறக்கி விட்டு திரும்பும்போதும், உரிய லோடு கிடைக்க வழி வகை கிடைக்கும் என்று கூறினார்.
டில்லி, சண்டிகர், கோல்கட்டா, சென்னை, கோவை என பல நகரங்களை இணைக்கும் வகையில், 'OptRoute' என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது, கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.