வங்கிக் கணக்கை வாடகைக்கு விடலாம் எனக் கூறி நூதன மோசடி - வெளியான அதிர்ச்சித் தகவல்!
எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறிவைத்து மோசடி.. கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விடும் ஏமாறும் இளைஞர்கள்... முழு விவரங்களை அறியலாம் இந்த செய்தி தொகுப்பில்...
சூரியவம்சம், அண்ணாமலை, படையப்பா போன்ற படங்களில் ஒரே பாட்டில் கதாநாயகன் முன்னேறி விடுவதாக கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். இதே போல், உடனடியாக பணக்காரனாக வேண்டும், கஷ்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இதற்காக அவர்கள் ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை.
எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து, சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. குறிப்பாக, வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி மற்றும் விளம்பரங்கள் மூலம், ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த மோசடி கும்பல், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது. வங்கிக் கணக்கை வாடகை விட்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.1,000 கமிஷன் கிடைப்பதாக கூறப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கை வாடகைக்கு விடுவதால், சம்மந்தப்பட்ட நபர் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு, வங்கி கணக்கை வாடகைக்கு விடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். வங்கி கணக்கை வாடகை விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரித்த அவர், வங்கி கணக்குகளை யாரிடமும் வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.