சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!
52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மூத்த மென்பொருள் பொறியாளர் குமாரசாமி சிவக்குமார் என்பவருக்கு மார்ச் 18 அன்று அடையாளம் தெரியாத சில நபர்களிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
டெல்லி சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக குறிப்பிட்ட அந்த மோசடிக்காரர்கள், பொறியாளர் குமாரசாமி சிவக்குமார் பெயரில் டெல்லியில் இருந்து மலேசியா செல்லும் விமான பார்சலில் 16 கடவுச்சீட்டுகள், 58 வங்கி அட்டைகள் மற்றும் 140 கிராம் போதை மருந்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்த அழைப்பு போதை தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக வந்துள்ளது. அவர்கள் ஸ்கைப் விடியோ அழைப்புக்கு வருமாறு வலியுறுத்தி இதிலிருந்து வெளியே வர வேண்டுமானால் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆர்டிஜிஎஸ் மற்றும் ஐஎம்பிஎஸ் பண பரிவர்த்தனைகள் மூலம் வெவ்வேறு தவணைகளில் ஐடி ஊழியர் ரூ.2.24 கோடியை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.
ஏப்ரல் 5-ம் தேதி வரை தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது குமாரசாமி சிவக்குமாருக்கு தெரியவில்லை. பணத்தை இழந்த பின்னர் உணர்ந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடகிழக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மட்டும் இதே போலான 25 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போன்ற மோசடியில் 29 வயதான பெண் வழக்குரைஞர் சில நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டு ரூ.14.57 லட்சத்தை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.