"GRINDR" செயலி மூலம் ரூ.50,000 மோசடி: 3 பேர் கைது!
பல்லடத்தில் "Grindr" செயலி மூலம் ஆசிரியரை ஆடையின்றி வீடியோ எடுத்து ரூ.50,000 பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த "GRINDR" செயலி என்பது ஓரின சேர்க்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த செயலி மூலம் 10 கி.மீ சுற்றளவில் உள்ள தன்பால் ஈர்ப்பாளர்களின் விவரங்கள் தெரிய வரும். இந்த செயலியானது வீடியோ கால் பேசிக்கொள்வதற்கும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனியார் பள்ளியில்
பணியாற்றி வருகிறார். இவர் "GRINDR" என்ற செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொன் நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன், அருள்புரத்தை சேர்ந்த ஜெகன், சேடப்பாளையத்தை சேர்ந்த வீரமணி ஆகிய
3 பேரிடமும் இந்த செயலி மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
நேரில் சந்திப்போம் என மூவரும் ஆசிரியரை அழைத்ததால் அவர்களை சந்திப்பதற்காக அந்த ஆசிரியர் பல்லடம் அருகே குங்குமம்பாளையம் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஆசிரியரை மிரட்டி இந்த 3 பேரும் அவரை ஆடையின்றி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
ஆசிரியர் தனது வங்கி கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அர்ஜுனன் என்பவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியரை மிரட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறித்த மூன்று பேரையும் பல்லடம் காவல் துறையினர் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில்
உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போன்று இந்த மூவரும் கடந்த ஒரு
வருடத்திற்கு முன்பு மசனகுடி காவல் ஆய்வாளரின் மகனை "GRINDR" செயலி மூலம்
பல்லடத்திற்கு வரவழைத்து நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் சிறைக்கு சென்று
வந்ததும் குறிப்பிடத்தக்கது.