தரமணி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: #MadrasHighCourt தள்ளுபடி!
தரமணி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனரான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் தனது நிறுவனத்தின் சார்பில் வா டீல், மெல்லிசை, புரியாத புதிர், தரமணி, சிவப்பு எனக்கு பிடிக்கும், அண்டாவைக் காணோம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்தப் படங்களை தயாரிப்பதற்காகசினிமா ஃபைனான்சியரான ககன் போத்ராவிடம் ரூ.2.6 கோடி இவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த தொகைக்காக சதீஷ்குமார் வழங்கிய ரூ.35 லட்சம் மற்றும் ரூ.45 லட்சம் மற்றும் ரூ.27 லட்சத்துக்கான வங்கி காசோலைகள் பணமின்றி திரும்பியதால், சதீஷ்குமார் மீது ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா முன்பாக நடந்தது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும், கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இந்த தண்டனையை எதிர்த்து ஜெ.சதீஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் தண்டனை ரத்து செய்யவும், நிறுத்திவைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும், பிரதான மேல்முறையீடு வழக்கை 21வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றியும் வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அன்று பிற்பகல் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி தண்டனையை நிறுத்திவைக்க கோரி புதிய மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மேல்முறையீடு மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை நீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பதாகவும், ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் நேரில் ஆஜராகி ரூ.10 ஆயிரம் பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற வேண்டும். மேலும், காசோலை தொகையில் 10% தொகையை 60 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்ற வழக்கு எண்ணில் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முதன்மை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சினிமா ஃபைனான்சியர் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.