'Frame பாருங்க ஜி' - அதிரடியாக வெளியானது ‘SK 23’ படத்தின் டைட்டில்!
ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடித்துள்ளார். ‘எஸ்கே – 23’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, கிளிம்ஸ் வீடியோவுடன் இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'மதராஸி' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.