“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” - ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நல வாரியத் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார். நேற்று இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
“பிராமணர்கள் நான்கு குழந்தைகளைப் பெறுவது கட்டாயம் என்று இளம் தம்பதிகளிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். சனாதன தர்மத்தைப் பாதுகாக்க, தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெறுவது மிகவும் முக்கியம். அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் ‘மோட்ச தர்மத்தை’ அடைய முடியும்.
நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருவதால், இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் வலுவான மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது. பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். விரைவில் வாரியம் இதற்கான பணிகளைத் தொடங்கும்.
வறுமை மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது. சமீபகாலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். நம் நாடு சுதந்திரம் பெறாதபோது, எங்களிடம் ஆடைகள் இல்லை. குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான வசதிகள் குறைவாக இருந்தன. ஆனால் தற்போது கடவுளின் கிருபையால், மாநில மத்திய அரசுகள் உள்ளன. இங்கு பசி, தாகம், உடை இல்லாமல் யாரும் இல்லை” என தெரிவித்துள்ளார்.