உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!
உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட உள்ளார். இதனிடையே அவர் மீதான குற்றவழக்குகளின் விசாரணையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான நிதி மோசடி வழக்கில், சுமார் 500 மில்லியன் டாலர் தொகையை கட்ட நியூயார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்த தொகை 175 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பங்குச் சந்தையில் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டியது. அதாவது அவரது நிகர மதிப்பு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதன்முறையாக உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் டொனால்டு டிரம்ப் இணைந்துள்ளார்.