NHRC தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் நியமனம்!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். முன்னாள் தலைவர் அருண் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1 முடிவடைந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக தலைவர் பதவி காலியாக இருந்தது.
இதனையடுத்து முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியத்தை தலைவராக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணையத் தலைவரை தேர்வு செய்தனர்.
2019 முதல் 2023 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ராமசுப்ரமணியன், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். கடந்த 2006ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் 2016-ல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கான ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு, 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகத் தக்கவைக்கப்பட்டார்.