#Singapore முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறையில் தனி அறை!
சிங்கப்பூரில் தொழிலதிபர்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டர் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈஸ்வரன். இவர் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில், தொழிலதிபர்களிடம் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பரிசுப் பொருட்களை முறையற்ற விதத்தில் பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தமை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையும் படியுங்கள் : ” #VineshPhogat -க்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு தான் ” – விமர்சித்த பாஜக தலைவர்…
சிங்கப்பூரை பொறுத்த வரை, குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர் அவரது அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும் விலைமதிப்புள்ள எதையும் இலவசமாகவோ போதிய கட்டணமின்றியோ ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.
அதன்பேரில் ஈஸ்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் சிலரிடமிருந்து பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் அக் - 3ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே, எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டர் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது :
"எஸ். ஈஸ்வரன் படுத்துறங்குவதற்கு பாய் மற்றும் இரு போர்வைகள் தரப்பட்டுள்ளாகவும் மற்ற அனைத்து சிறைக் கைதிகளையும் போல் பற்பசை, செருப்பு, உடை, துண்டு, உணவை உண்பதற்காக பிளாஸ்டிக் கரண்டி ஆகியவை வழங்கப்பட்டும்"
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.