முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் - காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரின் 33வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21 ஆம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அமைதி, மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை மக்களிடையே பரப்புவதும், பயங்கரவாதத்தின் சமூக விரோத செயல் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.