பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதனை அடுத்து 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குற்றச்சாட்டு முன்வைத்த பெண்ணை கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்தார். இதனை அடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது வெள்ளிக்கிழமை மைசூரு கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கு இது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), 354(B), 354(c) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்காலத் தடை கோரி ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து அவரது மகனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.