அடுத்தடுத்து வெளியான ஆபாச வீடியோக்கள் - தேவகவுடா மகன், பேரன் மீது வழக்குப்பதிவு!
பாலியல் புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி. ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் ஏப்.26 ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 300 க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. தொடர்ந்து, ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண் ஒருவர் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். உதவி கேட்டு வந்த பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் இவர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி. ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.