பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி, மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1990 முதல் 2000-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் பெரு அதிபராக பதவி வகித்த 85 வயதான ஆல்பர்டோ புஜிமோரி, அவரது ஆட்சியின் கீழ், 1990 காலகட்டங்களில், 25 பேரின் படுகொலைக்கு பின்புலமாக செயல்பட்ட குற்றத்திற்காக கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். 1991-ம் ஆண்டில், பெரு ராணுவத்தால், 8 வயது குழந்தை உள்பட 15 அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அதனைத் தொடர்ந்து, 1992-ம் ஆண்டில், 9 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் உள்பட 10 பேர், ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், ஆகிய இரு படுகொலை சம்பவங்களும், ஆல்பர்டோ புஜிமோரி தலைமையிலான அரசின் அறிவுறுத்தலின் பேரில் நிகழ்த்தப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, சில ஆண்டுகள் சிலி நாட்டில் இருந்த அவர், 2007-ம் ஆண்டு, அங்கிருந்து பெருவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன்பின், அவர் மீதான விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் மீறல் குற்றத்திற்காக, முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை, கடந்த 2009 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், பெரு நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் அவரை மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து நேற்று(டிச.6) விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனிடையே, முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரியின் விடுதலையை எதிர்த்து, சர்வதேச-அமெரிக்க மனிதஉரிமை நீதிமன்றம், அவரது விடுதலையை ஒத்திவைக்க கோரியிருந்தது. இதனை நிராகரித்த பெரு நீதிமன்றம், ஆல்பர்டோ புஜிமோரியை விடுதலை செய்துள்ளது. முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரியின் விடுதலை செய்யப்பட்டதற்கு, ஐநா அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், கண்டனம் தெரிவித்துள்ளார்.