கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை!
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய நிலையில், இன்று கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் - திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தி - அதிமுக வாக்குகளை குறி வைக்கும் பாஜக
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா வீட்டில் சோதனை நடைபெற்றது.
முன்னதாக, விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் உள்ள பிரபுவின் உறவினர்களான பன்னீர் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் சுபாஷ் உள்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபடட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதவில் கூறியிருப்பதாவது:
"கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.