முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு - திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்!
நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியான திவ்யப்பிரியா, தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்கள், குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் சுற்றுலாவை முடித்துவிட்டு உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வருவதற்காக நேற்று காரில் குடும்பத்துடன் வந்துள்ளனர்.
அப்போது காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால், காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா சாலையோரத்தில் இருந்த பக்கவாட்டில் இருந்த பாறை மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திவ்யப்பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த திவ்யப்பிரியா உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவ்யப்பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்றே மாதங்களே ஆன நிலையில், அவரது இறப்பு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.